கிண்ணியாவில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது சிறுவன் உயிரிழப்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் நேற்று(26) காலை இடம் பெற்றுள்ளது.

1 வயதும் 2 மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு மகனான முகமது சையான் மிசாரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வீட்டுக்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்கின்ற குழிக்குள், சென்று விளையாட முற்பட்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக, தற்போது இந்தப் பகுதியில் நீர் தேங்கி நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

கிண்ணியா பிரதேச, திடீர் மரண விசாரணை அதிகாரி குப்பைத்தம்பி நிஹ்மத்துல்லா வைத்தியசாலைக்கு வருகை தந்து, உரியவர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்து பொலிஸாரிடம் அறிக்கையை கையளித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களால் கடந்த காலங்களில், மழைநீர் வடிந்தோடக் கூடிய முறையான வடிகான் அமைப்பு முறை இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படாததினால், இவ்வாறான அனர்த்தம் நிகழ்ந்திருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *