உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். மதிய வேளையில் சாம்பார் அல்லது ரசம் சாதத்துக்கு ஒரு அருமையான சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை வழக்கமாக செய்வது போன்று வறுவல் செய்து சாப்பிடாமல், ஒருமுறை கல்யாண வீட்டு சுவையில் வறுவல் செய்து சாப்பிடுங்கள். இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
உருளைக்கிழங்குடன் பட்டாணி சேர்த்து செய்யப்படும் இந்த வறுவல் நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்த்தாக இருக்கும். இனி இந்த வறுவலை சாப்பிட கல்யாண வீட்டுக்கு செல்லும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரொம்ப ஈஸியா வீட்டிலேயே செஞ்சு சந்தோஷமா சாப்பிடலாம்.
உங்களுக் கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்– கால் கப் எண்ணெய்
– 1 இன்ச் இலவங்கப்பட்டை
– 4 கிராம்பு
– 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
– 2 ஏலக்காய்
– 10-12 முந்திரி
– 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
– 2 கொத்து கறிவேப்பிலை
– 1 கப் வெங்காயம, பொடியாக நறுக்கியது
– 4 பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கியது
– 2 தக்காளி, நறுக்கியது
– உப்பு தேவையான அளவு
– அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
– 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்
– ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள்
– 3 உருளைக்கிழங்கு, வேகவைத்தது
– 1/2 கப் பட்டாணி
– 1 டேபிள்ஸ்பூன் மட்டன் மசாலா
– ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
– ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் முந்திரி ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
– அதன்பின் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
– பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கியாய் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து தக்காளி மென்மையாக கூழ் போல மாறும் வரை வதக்கவும்.
– அதன்பின் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வவந்ததும், பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
– பட்டாணி மென்மையானதும் வேகவைத்த உருளைக்கிழங்கு சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மட்டன் மசாலா சேர்த்து, உருளைக்கிழங்கு உடையாமல் மெதுவாகக் கிளறவும். மசாலா உருளைக்கிழங்கில் இறங்கும் அளவிற்கு நன்றாக வேக வைக்கவும்.
– மசாலா நன்றாக வாசனை வந்ததும் அடுப்பை அணைப்பதற்கு முன் மீதமுள்ள கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
– அவ்வளவுதான் சூப்பரான கல்யாண வீட்டு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் தயார்!

