தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பெற்றுள்ளதுடன், மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பங்குபற்றிய 70 நிறுவனங்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களையும் விசேட மற்றும் பரிந்துரைச் சான்றிதழ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட செயலகம் குறித்த அடைவினை எட்டுவதற்கும், மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய ஏனைய நிறுவனங்களை வழிப்படுத்தி சிறந்த அடைவினை எட்டுவதற்கும் வழிகாட்டிகளாக திகழ்ந்த மாவட்ட செயலக உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 11.11.2026 திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் ஆர்.புவனேந்திரன் மற்றும் மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மு.சுபதரன், திருமதி.ரதி குலசிங்கம் ஆகிய உத்தியோகத்தர்கள் இதன்போது மாவட்ட செயலாளர் அவர்களினால் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய றீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பினை வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது மாவட்ட செயலாளர் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்திருந்தார்.
தேசிய ரீதியில் ஒரு முதல் இடத்தினையும், ஐந்து நிறுவனங்கள் இரண்டாம் இடங்களையும், 19 நிறுவனங்கள் மூன்றாம் இடத்தினையும், 45 நிறுவனங்கள் விசேட மற்றும் பரிந்துரைச் சான்றிதழ்களையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

