மட்டக்களப்பு மாவட்ட அரச நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலான அனுபவபகிர்வு நிகழ்வு நேற்று (10) சன்சைன் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் ஆர். புவனேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கிளின் ஸ்ரீலங்கா தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அரச சேவைகளில் புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்திய பத்து அரச நிறுவனங்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத் தீர்வுகள் தொடர்பான அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
மேலும், தரவுத்தளங்கள் மற்றும் தொழில்நுட்பச் செயலிகள் ஊடாகப் பொதுமக்கள் தமக்குத் தேவையான அரச சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களின் சேவை வழங்கலை நவீனமயப்படுத்தி, வினைத்திறனை அதிகரிப்பதுடன், காலதாமதமின்றித் தரமான சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன், பிரதேச செயலாளர்கள், உற்பத்தித்திறன் செயலகத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரொஹான் குணவர்தன, டி.பி. ஜயசிறி, வைத்தியர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

