சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரவிருந்த அரசியல் அபாயங்களையும் முன்னறிந்து எச்சரிக்கும் ஆற்றல் கொண்ட சிந்தனையாளராக இவர் திகழ்ந்தார்.
ஆரம்பத்தில் ஆசிரியராகவும், பின்னர் சட்டத்தரணியாகவும் பணியாற்றிய இவர், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் செயற்படத் தூண்டுவதற்காகத் தனது பொதுப்பணியை முன்னெடுத்தார்.
தமிழ் தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட இவர், புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்குகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான மிகவும் சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் தனது எழுத்துக்கள் மற்றும் கருத்துரைகள் மூலம் எடுத்துரைக்கும் அசாத்திய திறனைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

