கொழும்பு மாவட்டத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கல்வி கற்கக்கூடிய பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தகவலை பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் போதியளவில் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் பாடசாலை வருகை குறைவடைதல் மற்றும் இடைவிலகல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குத் தீர்வாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதுடன், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை போஷாக்குத் திட்டத்தின் மூலம் சில பகுதிகளில் மாணவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இன்றி பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்தில் பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நிர்வகிப்பதற்கான புதிய கொள்கைக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், 2027ஆம் ஆண்டு முதல் முறையான இடமாற்ற நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைப் பாதுகாப்பு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

