உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் ரஷ்யா நேற்று (07) நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 4 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொல்டாவா பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததுடன், கீவ் உள்ளிட்ட மேலும் மூன்று நகரங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைன் மக்களிடையே அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளதுடன், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், உக்ரைனின் ஏவுகணைகள், ட்ரோன்கள் உற்பத்தி மற்றும் சேமிப்பு தளங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவப் பயிற்சி தளங்கள் மீது உக்ரைனும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளுக்கு ரஷிய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் யோசனைகள் மற்றும் அமைதித் தீர்வுக்கான முயற்சிகளை வரவேற்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

