இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெற்றுக்கொள்ளாமல் இரு நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும்.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கை மற்றும் தாய்லாந்து பிரஜைகள் சாதாரண பயண நோக்கங்களுக்காக விசா இன்றி மற்றைய நாட்டுக்குள் நுழையவும், அங்கிருந்து வெளியேறவும், இடைநிலைப் பயணமாகச் செல்லவும் அனுமதிக்கப்படுவர்.
ஒரு பயணத்தின்போது அதிகபட்சமாக 30 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதேவேளை, 180 நாட்கள் கொண்ட எந்தவொரு காலப்பகுதியிலும் மொத்தமாக 90 நாட்களுக்கு மேல் தங்க முடியாது.
எனினும், வேலைவாய்ப்பு, கல்வி, ஊடகச் செயற்பாடுகள் அல்லது முன்கூட்டிய அனுமதி தேவைப்படும் பிற நோக்கங்களுக்காகப் பயணம் செய்பவர்களுக்கு இந்த விசா விலக்கு பொருந்தாது.
இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்படவுள்ளது.
விசா விலக்கு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

