ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் கடும் குற்றச்சாட்டு!

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் தலைமையில் இயங்குவதாகக் கூறப்படும் போதைப்பொருள் ஒழிப்பு குழுவினர், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து அப்பாவி இளைஞர்களை போதைப்பொருள் வழக்குகளில் சிக்கவைத்து கைது செய்வதாக ஏறாவூரைச் சேர்ந்த செய்யது முகமது பளீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதுகாப்புப் படையினருக்கு நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி வருவதாகக் கூறிய அவர், தாம் வழங்கும் தகவல்கள் தொடர்பில் குறித்த குழுவினரால் அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் அப்பாவி இளைஞர் ஒருவரை போதைப்பொருளுடன் கைது செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தடுக்க முற்பட்டபோது, இராணுவ மேஜர் அனஸ் தன்னை மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும் பளீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் மின்னேரியா இராணுவ முகாமிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்காலத்தில் ஜஸ் போதைப்பொருள், குண்டுகள் அல்லது துப்பாக்கி போன்றவற்றை வைத்துக் கைது செய்வதாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் பளீல் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவ முகாம்களில் இருந்து போதைப்பொருள் வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அண்மையில் தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டிய அவர், குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் அல்லது பாதுகாப்புத் தரப்பினரின் பதில் வெளியாகவில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *