மாங்குளம்: முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், உறங்கிக்கொண்டிருந்த தம்பதியைத் தலையில் பலமாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் விவரங்கள்: இன்று (செப்டம்பர் 24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனிக்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், திடீரென வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கணவன் மற்றும் மனைவி இருவரின் தலையிலும் பலமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த மகள் சத்தமிட்டு கூச்சலிடவே, உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீவிர விசாரணை: இக்கொடூர கொலையைச் செய்த நபர்கள் யார், எந்த நோக்கத்திற்காக இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த மாங்குளம் காவல்துறையினர், தடயவியல் காவல் துறையினர், விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

