மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் மேற்பார்வையில் இந்நிகழ்வு கடந்த 23ஆம் திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறுவர்களைப் பாதுகாத்தல், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து வலையமைப்பின் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் வளவாளர்களாக சட்ட வைத்திய அதிகாரி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் மற்றும் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் சு. பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

மேலும், சிறுவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்புகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்கும் நடைமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதுடன், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *