அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த ஆட்டுப்பண்ணை முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. உயிரிழந்த ஆடுகளின் சந்தைப் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பண்ணையின் உரிமையாளர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், இச்சம்பவம் அவருக்குப் பெரும் பொருளாதார இழப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

