தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்குவதற்கு பூகோள அரசியல் தடையாக உள்ளதாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை முன்னிட்டு, வவுணதீவு கன்னங்குடாவில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் பொதுச்சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையின் பூகோள அரசியல் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், 76 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் தலைமைகள் ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டும் எனவும், இன உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் தலைமைகளைத் தெரிவுசெய்வது மக்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

