மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(04) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ரீ. ஜெயசிங்கம், பொருளாதார நிபுணர் எஸ். சுந்தர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாவட்டத்தில் சிறுதானியப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல், உள்ளூர் தொழில்முனைவோரின் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவித்தல், அத்துடன் இந்திய வர்த்தகர்களுடன் புதிய வர்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சிறுதானியப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கும் துறைசார் நிபுணர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
இதன்போது, இந்தியத் தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல், பாரம்பரிய உணவுப் பண்பாட்டின் ஓர் அங்கமான சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துப் பயன்கள் தொடர்பான விழிப்புணர்வும் இதன்போது வழங்கப்பட்டதுடன் இந்தியாவில் இருந்து உயர் ரக சிறுதானிய விதைகளை பெற்றுக் கொள்வதற்கும், நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து அவற்றை கையாள்வதற்கான தொழில் நுட்ப அறிவை வழங்குவது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் தமது வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் குறிப்பாக இந்திய வர்த்தகர்களுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையவுள்ளது.
இந் நிகழ்வில் இந்தியத் தொழில் அதிபர்கள்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டமை

