இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5ஆவது தலைமை இயக்குநர் மட்டப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகமான NCBயின் துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமையில் இந்தியக் குழுவும், இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவான PNBயின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமையில் இலங்கை குழுவும் பங்கேற்றன.
இந்தியக் குழுவில் NCB அதிகாரிகளுடன் தமிழ்நாடு காவல்துறை, இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தரப்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன், சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை கடலோரக் காவல் படை, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை கடற்படை, தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, நிதிப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இரு தரப்பினரும், போதைப்பொருள் கடத்தலில் உருவாகி வரும் புதிய போக்குகள், குறிப்பாக கடல் வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காணுதல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பயன்படுத்தப்படும் கடத்தல் வழித்தடங்கள் மற்றும் கடத்தல் முறைகள் தொடர்பான செயற்பாட்டுக்கு உகந்த புலனாய்வுத் தகவல்கள் இரு தரப்பினராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி கொழும்பில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் நடைபெற்றுள்ள 5ஆவது தலைமை இயக்குநர் மட்டப் பேச்சுவார்த்தையின் நிறைவில், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ள, இரு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

