அடுத்த முறை சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதம் செய்யும் போது ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தவரங்காயை வைத்து அட்டகாசமான சுவையில் கூட்டு செய்யுங்கள். இந்த கொத்தவரங்காய் கூட்டு ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற சுவையில் இருக்கும்.
இந்த கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த கூட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மதிய வேளையில் டக்கென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த கூட்டு ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம். இந்த கூட்டு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் கொத்தவரங்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கொத்தவரங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
– கொத்தவரங்காய் – 200 கிராம்
– பாசி பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
– மிளகு – கால் ஸ்பூன்
– வர மிளகாய் -2
– துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு
– மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
– எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
– கடுகு – 1/4 டேபிள்ஸ்பூன்
– கறிவேப்பிலை – ஒரு கொத்து
– பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
செய்முறை:
– கொத்தவரங்காயை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
-ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
– கொத்தவரங்காய் நன்றாக வேகும் வரை சமைக்கவும். பொதுவாக கொத்தவரங்காய் 10 நிமிடத்தில் வெந்துவிடும்.
– கொத்தவரங்காய் வெந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு வாணலியில் பாசிப்பருப்பு, கருப்பு மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும், பாசிப்பருப்பு ஒரு நல்ல வாசனை வரும் வரை மற்றும் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
– இது ஆறியதும் தேங்காய் துருவலுடன் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
– இந்த அரைத்த விழுதை வேகவைத்த கொத்தவரங்காயுடன் சேர்க்கவும்.
– நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கூட்டு பதத்திற்கு வரும் வரை கிளறவும். அரைத்த விழுதில் பாசிப்பருப்பு சேர்த்ததால், இது ஆறியதும் நன்கு கெட்டியாகும்.
– ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
– கடுகு பொரிந்ததும் அதை காயின் மீது கொட்டி கிளறினால் அருமையான கொத்தவரங்காய் கூட்டு ரெடி!

