சுகாதார பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு பாடும் மீன் அரிமா கழகமும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து “வாழும் போதே வாழ்த்துவோம்” என்னும் தொனிப்பொருளின் கீழ், எங்கள் நகரத்தை நாள்தோறும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் கலந்து கொண்டு, சுகாதார பணியாளர்களை நேரில் கௌரவித்து அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

நகரின் தூய்மை மற்றும் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தியாகமான சேவைகள் அளவிட முடியாதவை என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.எந்தவிதமான காலநிலை, சிரமங்கள் இருந்தாலும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பணியாற்றும் இவர்களின் சேவை அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன், மாநகர பிரதி ஆணையாளர் வண்ணமணி தேவநேசன், பாடும் மீன் அரிமா கழகத்தின் நிர்வாகிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

பாடும் மீன் அரிமா கழகத்தின் நிர்வாகிகள் உரையாற்றும் போது, சமூகத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் சுகாதார பணியாளர்களை அவர்கள் வாழும் போதே கௌரவிப்பது சமூகத்தின் கடமை எனக் குறிப்பிட்டு, எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூகநல நடவடிக்கைகளை மாநகர சபையுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில், சுகாதார பணியாளர்களின் சேவையை பாராட்டி அனைவரும் நன்றியுரைகளை தெரிவித்ததுடன், நகரை மேலும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, சுகாதார பணியாளர்களின் மன உற்சாகத்தை உயர்த்தியதோடு, சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *