சீரற்ற வானிலையால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (01) நடவடிக்கை எடுத்தது.

 

காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று மாலை 4 .00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.

 

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக, அனர்த்தங்களால் காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இதற்கிடையில், நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, கனமழை மற்றும் காற்று காரணமாக நாடு முழுவதும் 55,940 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

இவற்றில் பல ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

 

தொடர்ச்சியான மின்சாரம் வழங்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

இன்றும் பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *