காணி, சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட ரூ. 5 இலட்சத்திற்கு (Rs. 500,000) மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை நேரடிப் பணமாக (Cash) மேற்கொள்வதால், தற்போதைய வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமையைச் சந்திக்க நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எச்சரித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி முறைமைகளுக்கு வெளியே, ரூ. 5 இலட்சத்திற்கு அதிகமாக நேரடிப் பணமாகச் செலுத்தப்படும் வணிகச் செலவுகள், வரிக்குரிய வருமானத்தைக் கணக்கிடும் போது கழிக்கக்கூடிய செலவுகளாக (Deductible expenses) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அத்திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு வணிக நிறுவனம் தனது செலவிற்காக 10 இலட்சம் ரூபாவை (Rs. 1 million) நேரடிப் பணமாகச் செலுத்தினால், அந்தத் தொகை வரி விலக்கிற்கான செலவாக ஏற்றுக்கொள்ளப்படாது. இதனால் அந்நிறுவனத்தின் வரிக்குரிய இலாபம் 10 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கும். இதன் விளைவாக, 30 சதவீத நிலையான கூட்டுத்தாபன வருமான வரி (Corporate income tax) விதிக்கப்படும் ஒரு நிறுவனத்திற்கு, மேலதிகமாக 3 இலட்சம் ரூபா வரிச் சுமை ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சொத்துப் பரிவர்த்தனைகளுக்கும், குறிப்பாக காணி விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபத்தைக் கணக்கிடும் போதும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் பொருந்தும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, ஒருவர் 90 இலட்சம் ரூபாவிற்கு (Rs. 9 million) ஒரு காணியைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை 1 கோடி ரூபாவிற்கு (Rs. 10 million) விற்பனை செய்தால், சாதாரண வரி விதிகளின் கீழ் அவரது வரிக்குரிய இலாபம் 10 இலட்சம் ரூபாவாக மட்டுமே இருக்கும். ஆனால், ஆரம்பத்தில் அக்காணியைக் கொள்வனவு செய்த போது உரிய நிதி விதிமுறைகளை மீறி நேரடிப் பணமாகச் செலுத்தியிருந்தால், அந்த 90 இலட்சம் ரூபா கொள்வனவுச் செலவு வரி நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படாது. அத்தகைய சூழ்நிலையில், உண்மையான 10 இலட்சம் ரூபா இலாபத்திற்குப் பதிலாக, முழுமையான 1 கோடி ரூபா விற்பனைத் தொகைக்கும் வரி கணக்கிடப்படக்கூடும் என அவர் விளக்கினார்.
முறைசார்ந்த நிதி வழிகள் ஊடாகப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், நிறுவப்பட்ட வரி முறைமைக்கு வெளியே இடம்பெறும் நிதி நடவடிக்கைகளை ஒழுங்குமுறைக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கும் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

