மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களின் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட விடுதிகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை (21) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதன்போது, பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், சமயத் தலைவர்களின் ஆசியுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையக் கட்டிடம் மற்றும் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ தங்குமிட விடுதியும் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த கட்டிடங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

