வங்காள விரிகுடா தொடர்பில் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.

‘முரசு’ புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் பிரவேசித்துள்ளதாகவும், அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கி பயணிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 65-75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, இந்த புயல் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி அறிவித்தல் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *