ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு – தனுஷ் அதிருப்தி!

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாக தனுஷ் தமது எக்‌ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’.

தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இதனை வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பொலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மற்றொரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் எதிர்வரும் நவம்பர் 20-ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

பொலிஸாரின் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, விழாவில் 8 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இசை வெளியீட்டு விழாவுக்கு நுழைவுச்சீட்டு வைத்திருந்த ஏராளமான ரசிகர்கள் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் குறித்து நடிகர் தனுஷ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இது யாருடைய தவறு என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப்பேற்று எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *