கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம்: 6 பேரின் வழக்கு ஒத்திவைப்பு!

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கு, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (02) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கின் நியாயாதிக்கம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

மேலும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகள் எழுத்துமூல ஆட்சேபனைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன், ஐந்தாம் பிரதிவாதியான ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், தனது முகநூல் பக்கத்தில் வழக்காளி தொடர்பான பதிவுகள் இல்லையெனக் குறிப்பிட்டு, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து, மேலதிக ஆட்சேபனைகள் மற்றும் வாதங்களை முன்வைப்பதற்காக வழக்கை நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *