மீன்வளத்துறையில் களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்வள, நீரியல்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது. இந்த நிகழ்வு, மீன்வள, நீர்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய அரசாங்கம் 265 மில்லியன் இலங்கை ரூபாய் மானிய உதவியாக வழங்குகிறது. இதன் மூலம், மீன்வள மற்றும் நீர் வளத் திணைக்களம், இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமை (NARA) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்.
இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களின்; பயன்பாடு, மீன்வளத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டுத் திறன், செயல்திறன் மற்றும் கள மட்டத்திலான இருப்பை மேம்படுத்தும். இது விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீனவ சமூகங்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணவும் வழிவகுப்பதன் மூலம், இலங்கை முழுவதும் பொதுச் சேவைகளை மேம்படுத்த உதவும். மேலும், இந்த முயற்சி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்கிற்கும் பங்களிக்கிறது.
இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் மக்கள் மைய அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்கள், நாட்டின் 25 மாவட்டங்களிலும் மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, மீன்வளம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

