இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது எடல்வைஸ் ஏர்!

சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் இணைக்கும் வகையில், சுவிஸ் விமான நிறுவனமான எடல்வைஸ் ஏர் (Edelweiss Air) இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை (winter flight) மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, வாராந்தம் மூன்று விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) தகவலின்படி, குளிர்காலப் பருவத்தை முன்னிட்டு இந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எடல்வைஸ் ஏர் விமானத்தில் இலங்கையை வந்தடைந்த பயணிகளை வரவேற்கும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தினால் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு அன்பான வரவேற்பை வழங்கும் நோக்கில் இந்தக் கலாசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பருவமாகக் கருதப்படும் குளிர்காலத்தில், எடல்வைஸ் ஏர் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *