அதிக விலைக்கு கீரி சம்பா விற்ற அங்காடிக்கு அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வெலிமடையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ரூபாய் மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது, அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (GR 11) அரிசியை 260 ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட 5 ரூபாய் அதிகமாக அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விற்பனை நிலையங்களில் அதிக விலை அறவிடுதல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைச் செய்யுமாறு பொதுமக்களிடம் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *