மைலத்தமடு, மாதவனைக்கு மாவட்ட செயலாளர் களவிஜயம்!

மட்டக்களப்பு மைலத்தமடு – மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் விசேட களவிஜயம் ஒன்று கடந்த 03ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

கால்நடைப் பண்ணையாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்ற இக்களவிஜயத்தில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லிலாரத்ன உள்ளிட்ட பொலிஸ், மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம் மற்றும் மாகாண கால்நடை உற்பத்தித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கால்நடைப் பண்ணையாளர்களின் முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் காவலரணில் தமிழ் மொழி பேசக்கூடிய உத்தியோகத்தர்களை நியமித்தல், சட்டவிரோத மின்சார வேலிகளைத் தவிர்த்தல் மற்றும் இராணுவப் பயிற்சி முகாம்களில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை, தற்காலிகமாக அடையாளம் காணப்பட்ட மகாவலி மற்றும் வனவள திணைக்களத்திற்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கு அனுமதி வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைலத்தமடு – மாதவனை பகுதியில் 1,570 ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் தரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலவும் முரண்பாடுகளுக்குத் தற்காலிகத் தீர்வு காண்பதே இக்களவிஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *