நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் நாளை வியாழக்கிழமை (22) மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை முழுமையாக நீக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் அமுல்படுத்தப்பட்டன. இதற்கமைய, இன்றும் (21) மின்வெட்டுகள் தொடர்கின்றன.
இந்நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை நாளை முதல் மீண்டும் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் திட்டமிட்டபடி மீள ஆரம்பிக்கப்பட்டால், நாட்டில் மின்வெட்டுகளைத் தொடர்ந்து அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போகலாம் என துறைசார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

