பிரான்ஸில் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த படையினர் களமிறக்கம்!

கடந்த வார இறுதியில் பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டுள்ள பிரான்ஸ் அரசாங்கம், எதிர்வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள புதிய போராட்டடங்களை எதிர்கொள்ள பொலிஸாருடன் இராணுவத்தினரையும் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டடங்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாரிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை எனவும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் பாதுகாப்புத் திட்டமிடல்களில் குறைபாடுகள் காணப்பட்டதை ஒப்புக்கொண்ட உள்நாட்டு அமைச்சர் லொரன்ட் நூனெஸ், சம்பவங்கள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது பங்கிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் செவ்வாய்க்கிழமை இரவும் நீடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், லிமோஜஸ் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்துக்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிர இடதுசாரிக் குழுவொன்றைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் வன்முறைச் சூழல் பிரான்ஸின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் 10 ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், திருட்டு மற்றும் சொத்துச் சேதங்கள் காரணமாகப் பல மில்லியன் யூரோக்களை இழக்க நேரிடும் எனக் காஃபோர் பல்பொருள் அங்காடிச் சங்கிலி எச்சரித்துள்ளது.

பிரான்ஸைத் தவிர, இத்தாலியின் மிலன் நகரிலும் கடந்த வாரம் வன்முறைகள் வெடித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கம் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதேவேளை, அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இத்தாலிய பிரதமர் எடி ராமாவுக்கு எதிராகத் தொடர்ந்து ஏழாவது நாளாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *