மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் முதல் தேற்றாத்தீவு வரையான பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகள், வேலிகளைச் சேதப்படுத்துவதுடன் பயன்தரும் மரங்கள் மற்றும் விவசாய விளைநிலங்களையும் அழித்து வருகின்றன.
மட்டுவாவியின் கரையோர சதுப்பு நிலக் காடுகளில் தங்கியிருக்கும் காட்டு யானைகள், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியைக் கடந்து கிராமங்களுக்குள் நுழைவதால், அவ்வீதியில் பயணிப்போருக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாகக் காட்டு யானைகள் நடமாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நகர்ப்புற மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

