அமைச்சர் லால் காந்த துப்பாக்கிகளை விநியோகித்து, விலங்குகளைச் சுடுமாறு கூறியதன் விளைவாகவே இன்று நாம் காவந்திஸ்ஸ யானையை இழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யானைகளைப் பாதுகாப்பதற்காக GPS செயற்கைக்கோள் கண்காணிப்புக் கழுத்துப் பட்டைகள், வெப்ப மற்றும் அகச்சிவப்பு கெமெராக்களைக் கொண்ட ட்ரோன்கள், ஸ்மார்ட் சென்சார்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புவியியல் தகவல் முறைமை (GIS) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீண்ட தந்தங்களைக் கொண்ட காட்டு யானையான ‘மகாசேன்’ காணாமல் போயுள்ள நிலையில், அதைக் கண்டுபிடிப்பதற்காக விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பைக் கருத்திற்கொண்டு, இந்தியாவில் அந்நாட்டின் மிகப்பெரிய யானைக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதைப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் விசேட செயலணியொன்றை அமைக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததுடன், அதன் காலிலும் வயிற்றுப் பகுதியிலும் வெடிபொருட்களால் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் தொடர்பில் முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
யானை–மனித மோதல்களால் விவசாயப் பயிர்கள், மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், அதற்குத் தீர்வாகத் துப்பாக்கிகளை விநியோகித்து யானைகளைச் சுடுமாறு கூறுவது பொருத்தமான நடவடிக்கையல்ல எனத் தெரிவித்தார்.
அரசாங்கம் பதவியேற்ற ஆரம்ப காலத்தில் அமைச்சர் லால் காந்த முன்வைத்த துப்பாக்கி விநியோக யோசனை தவறானது எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு விநியோகிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் மீளாய்வு செய்து, முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

