கண்டியின் பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

ஹரிஸ்பட்டுவ, பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை (21) காலை 9.00 மணி முதல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை 42 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும்.

மெதவெல (பழைய மற்றும் புதிய நீர்த்தேக்கப் பகுதிகள்), கல்லெனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம உள்ளிட்ட பல பகுதிகள் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கெவும்கொஹே வீதி, கோனிகொட, பால்கும்புர, அரம்பேகம, பதுகொட, தித்தெனிய, பொக்காவல, கலகெதர, பரகஹதெனிய, யடிவில, மில்லவ மற்றும் பிலஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறித்த காலப்பகுதியில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *