மக்கள் ஆணையைப் பாதுகாக்க அநுராதபுரத்தில் பேரணி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஊழல்வாதிகள், திருடர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அநுராதபுரத்தில் இன்று (19) பாரிய அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது.

‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில், பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பதாகைகளை ஏந்தியவாறு அநுராதபுரம் நகரில் பேரணியாகச் சென்ற பௌத்த பிக்குகளும் பொதுமக்களும், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பௌத்த பிக்கு ஒருவர், ஒரு நாடு முன்னேறுவதற்கு அதன் சட்டக் கட்டமைப்பும் ஒழுக்கமும் அடிப்படையானவை எனக் குறிப்பிட்டார். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கு வினய ஒழுக்கம் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டம் சீர்குலைந்திருந்த நாட்டை இளைஞர்கள் மீண்டும் சீரமைத்து முன்னோக்கிக் கொண்டு செல்லும் நிலையில், அதனை மீண்டும் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இத்தகைய செயற்பாடுகளைக் கண்டு இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் தெற்கில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டதற்கான காரணங்களில், நாட்டில் சட்டம் சீர்குலைந்திருந்தமையும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருப்பது இரண்டு நாடுகள் இருப்பதற்குச் சமமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் வளங்கள் மக்களைச் சென்றடையாத நிலைமை கடந்த காலங்களில் காணப்பட்டதாகவும், அரசியல் அதிகாரத்தில் இருந்த சிலரும் உயர்மட்டத்தில் இருந்த சில பௌத்த மதகுருமார்களும் இணைந்து நாட்டின் வீழ்ச்சிக்குப் பங்களித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தற்போது இளைஞர்கள் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகள் தொடர வேண்டும் எனவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அனைவருக்கும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாட்டின் சட்டக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதுடன், நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *