கிளிநொச்சியில் 19 மீனவர்களுக்கு மானியப் படகுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழிலை மேம்படுத்துவதையும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் படகுகளையும் அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார்.

டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலான உதவித் திட்டத்தின் கீழ், தட்டுவன்கொட்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, மீனவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இலகுபடுத்தும் வகையில் புதிய நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கொழும்பில் அச்சிட்டு வழங்கப்பட்டு வந்த மீனவர்களுக்கான அடையாள அட்டைகளை, இனிமேல் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அச்சிட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைத்து, மாவட்ட மட்டத்திலேயே இச்சேவையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், கடற்றொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அரச சேவைகளை மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர், மீனவ சமூகப் பிரதிநிதிகள், க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *