பல்கலை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம், கடந்த 17 ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்ட கண் பரிசோதனைகளின் போது மூக்குக் கண்ணாடிகள் அவசியமென கண்டறியப்பட்ட 316 மாணவ மாணவிகளுக்கு இதன்போது இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையின்படி, எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியன இத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றன.

கடந்த காலங்களில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதியமானது, தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாக சபையினால் முறையான திட்டமொன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், பேராசிரியருமான ஜே.ஆர்.பி. ஜயகொடி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நிதியத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வர வேண்டியிருந்த போதிலும், தற்போது அந்தச் சேவையைப் பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பரவலாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, இரண்டு மூன்று மாதங்களுக்குள் குறித்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன், இந்த முறைமையின் காரணமாக சில மாகாணங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு நூறு வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்காக ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி நிதியத்திற்கும் அதன் பணிக்குழாமிற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பந்துல ஜயதிலக நன்றி தெரிவித்தார்.

மூக்குக் கண்ணாடி தேவை உள்ள பலரும் இருக்கக்கூடும் என்றாலும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உபவேந்தர் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் மூலம் பயனடையும் மாணவர்களுக்கு அதற்காக பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகேயும் இங்கு மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *