சிலோன் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026, ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு வணிகக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்தன.
தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுக்களில் சுகாதாரம், மருந்துகள், சூரிய ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, காலணி தயாரிப்பு, தளவாடங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இக்குழுக்கள் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தன.
இதன்போது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளையும், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும், கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனக் குழு இலங்கையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் வணிகங்களுக்கு இடையிலான சந்திப்புகளை நடத்தியதுடன், நெஸ்லே மற்றும் எலிஃபண்ட் ஹவுஸ் நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் விஜயம் செய்தது.
இதேவேளை, கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனமும் சிலோன் வர்த்தக சம்மேளனமும் கேரளா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்த இரு குழுக்களும், இலங்கையில் இந்திய நிறுவனங்களுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் தொடர்பாகக் கலந்துரையாடின.
இந்த விஜயங்கள், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதுடன், புதிய முதலீடுகள் மற்றும் வணிகக் கூட்டணிகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

