மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளைப் பகைமையாக வளர விடாமல், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிந்துணர்வின் மூலம் தீர்ப்பதில் மத்தியஸ்த சபைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இவ்வமைப்புகள் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப உதவுகின்றன.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபை, 2026 ஒக்டோபர் 15ஆம் திகதியுடன் தனது 28 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்கிறது.
1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இச்சபை, 1998 ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளில் மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடிச் சபையாக இது விளங்குகிறது. யுத்தச் சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்குச் சேவையாற்றியுள்ளது.
இச்சபையின் முதல் தவிசாளராகத் தம்பியப்பா கைலாயபிள்ளை கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஜெ. எப். சந்திரசிறி, வே. சந்திரசேகரம், திருமதி ம. துளசிமணி, வே. நடராஜா, கு. தேவேந்திரன் உள்ளிட்டோர் தவிசாளர் பொறுப்பை ஏற்று சபையின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். 2025ஆம் ஆண்டு முதல் தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் தற்போதைய தவிசாளராகப் பணியாற்றி வருகின்றார்.
கடந்த 28 ஆண்டுகளில் குடும்பப் பிரச்சினைகள், காணி முரண்பாடுகள், நிதிப் பிணக்குகள் மற்றும் தனிநபர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இச்சபையினூடாகக் கையாளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 7,300 பிணக்குகள் இணக்கப்பாட்டின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1,500 பிணக்குகளுக்குத் தீர்வு காணப்படாமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 25 மத்தியஸ்தர்கள் இச்சபையில் சேவையாற்றுகின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மத்தியஸ்தர்கள் ஒன்றுகூடி, பிணக்காளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான மத்தியஸ்த சபைப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஷாத் தெரிவிக்கையில், தேசிய அளவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு இலட்சம் பிணக்குகள் மத்தியஸ்தத்தின் மூலம் தீர்க்கப்படுவதாகவும், நாடளாவிய ரீதியில் 9,000க்கும் மேற்பட்ட தன்னார்வ மத்தியஸ்தர்கள் சேவையாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், நிரந்தரக் கட்டிடம் இன்மை, பெண் மத்தியஸ்தர்களின் பற்றாக்குறை, இடவசதிப் பிரச்சினைகள் மற்றும் பயிற்சிகளுக்கான நிதித் தேவை போன்ற சவால்கள் இச்சபையில் காணப்படுகின்றன.
மக்களின் நேரத்தையும் செலவையும் சேமித்து, குடும்ப உறவுகளையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் பங்களிக்கும் ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை, எதிர்காலத்திலும் தனது சேவையைத் தொடர்வது முக்கியமானதாகும்.

