போதைப்பொருளை ஒழிப்போம்! வளமான நாட்டை உருவாக்குவோம்!’ எனும் விசேட கருப்பொருளில் மண்டூர் ‘மலரும் மொட்டுக்கள்’ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியும் உணர்ச்சிப்பூர்வமான வீதி நாடக நிகழ்வும் மிகச் சிறப்பாக 14.10.2026 இல் மண்டூர் மக்கள் வங்கியின் முன்பாக நடைபெற்றது.
நமது எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அரக்கனிடமிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கத்தோடு இந்த விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திட்ட இயக்குனர் Rev.அருள்பணி டானியேல் அருள்ராஜ் அவர்களின் தலைமையிலும், திட்ட முகாமையாளர் R. உதயதாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
மண்டூர் பிரதான வீதியில் நடைபெற்ற இந்த பேரணியில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும். எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி வீதியால் சென்ற அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிரத அதிதிகளாக களுவாஞ்சிக்குடி சிறுவர் நன்னடத்தை நிலைய பொறுப்பதிகாரி M.N.F ரபாஸ், சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு உத்தியோகஸ்தர் பவிதா சுபாகரன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப் பற்று வெல்லாவெளி சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான T. நவநீதன் மற்றும் சு. கருணாகரன் விசேட அதிதியாக வெல்லாவெளி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுதர்சன் ஆகியோர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் அனைவரும் தமது கருத்துரைகளின் போது போதைப்பொருள் ஒழிப்பில் சிறுவர் அமைப்புகளினதும் பெற்றோர்களினதும் கூட்டான பொறுப்பைச் சுட்டிக்காட்டியதுடன், ‘மலரும் மொட்டுக்கள்’ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் இந்த சமூகப் பணியைப் பெரிதும் பாராட்டிப் பேசினர்.
பேரணியின் தொடர்ச்சியாக மண்டூர் மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற வீதி நாடகம் நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது. போதைப்பொருள் பழக்கத்தால் ஒரு குடும்பமும், தனிநபரின் எதிர்காலமும் எவ்வாறு சீரழிகிறது என்பதையும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும் சிறுவர்களும் இளைஞர்களும் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டிய இந்த வீதி நாடகம் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.போதைப்பொருள் அற்ற, பாதுகாப்பான மற்றும் வளமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்ற உறுதியோடு இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

