அடுத்த சில தினங்களில் எதிர்பார்க்கப்படும் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்று (14) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பருவமழையால் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் நிதி அனுசரணையுடன், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வழிகாட்டல் திட்டங்கள் தொடர்பிலும் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி விளக்கமளித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளின் கீழுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
வருடாந்தம் வழமையாகப் பெய்யும் சுமார் 800 மில்லிமீற்றர் மழை குறுகிய காலத்திற்குள் பெய்யுமாயின், கல்லோயா நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் எனப் பிரதீப் கொடிப்பிலி எச்சரித்தார்.
எனவே, வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஏ.எல்.எம். அல்தாப், கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். அஹ்ஸன் மனாஸிர், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் ஆர்.எம். நளீப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

