ஆசிரியை மதிவதனியின் மரணத்திற்கு நீதி கோரி வவுணதீவில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு,மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆசிரியை மதிவதனி கமலநாதன் அவர்களின் மரணத்திற்கு நீதி கோரியும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“நீதிக்கான மக்களின் குரல் அமைப்பு” ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “ஆசிரியை மதிவதனி கமலநாதன் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும்”, “பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”, “சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களைக் கட்டுப்படுத்து” மற்றும் “உயிரைக் காப்பது அரசின் கடமை” போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு கண்டனக் குரல்களை எழுப்பினர்.

வீதிப் போக்குவரத்தில் கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகமும், விதிமீறல்களுமே இவ்வாறான தொடர்ச்சியான விபத்துகளுக்கு முதன்மை வீதி ஆபத்தாக அமைகின்றன எனச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் நீதிக்கான மக்களின் குரல் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சுரேஸ்,செயலாளர் குக்குமரராஜா உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைப்பினால் மகஜர் ஒன்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *