அக்கரைப்பற்று மாணவர்கள் ஐவர் ‘NEXTGEN LEADERS’ நிகழ்வில் பங்கேற்பு!

மாணவர்களின் ஆளுமைத் திறன்களை மேம்படுத்தி, தலைமைத்துவப் பண்புகளையும் நேர்மறையான மனப்பான்மையையும் வளர்த்து, பொறுப்புமிக்க எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், ‘CLEAN SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ‘NEXTGEN LEADERS’ சிறப்பு ஆளுமை மற்றும் மனப்பான்மை அபிவிருத்தி நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். நௌபர்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு!

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மாணவர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவ ஆற்றல், நேர்மறையான சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இச்செயற்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சுதர்சன், ஏ. நசீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரீ. உதயகுமார் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச ‘CLEAN SRI LANKA’ திட்டப் பொறுப்பாளர், வளவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு வலுச்சேர்க்கும் முன்னெடுப்பு!

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமாரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் கீழ், மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, Attitude and Personality Development Programme எனப்படும் மனப்பான்மை மற்றும் ஆளுமை அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்ந்து, அவர்களைத் திறமையான, தன்னம்பிக்கை மிக்க, பொறுப்புணர்வுள்ள எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய முயற்சிகள் கல்விச் சமூகத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருக்கோவில் கல்வி வலயத்தில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டங்களுக்குக் கல்விச் சமூகத்தினர் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *