41 வயதிலும் ஓய்வை எண்ணாத ரொனால்டோ!

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று கூறி இருக்கும் போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரோனால்டோ, அணியில் இருந்து வெளியேறியதற்கு தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நோர்வேக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற தேசிய லீக் போட்டியில் மாற்று வீரராக இருக்கையில் அமரவைக்கப்பட்டதை அடுத்து 41 வயது ரொனால்டோ போர்த்துக்கல் அணியில் இருந்து வெளியேறினார். இது தொடர்பில் அவர் விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது செயலுக்காக பொறுப்புக் கூற தயார் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் போர்த்துக்கல் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜேசுஸ் இருமுறை வாக்குறுதியை மீறியதாகவும் குற்றம்சாட்டினார். நோர்வேக்கு எதிரான போட்டியில் 30 நிமிடங்கள் தன்னை ஆடச் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்ததாக குறிப்பிட்டார்.

‘அடுத்து என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிவும். இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தயாராக இருந்தேன். நிமிடங்கள் கடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னை மைதானத்திற்கு களமிறக்கவில்லை’ என்று ரொனால்டோ கூறினார்.

உடல் தகுதியுடன் இருந்து தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி கோல்களைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக இதுவரை ஆடிய 234 போட்டிகள் மற்றும் 146 கோல்கள் இரண்டுமே உலக சாதனையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *