ஓய்வு பெறுவதற்கு முன்னரான தயார்படுத்தல் – வெற்றிகரமான முதுமை வாழ்வு!

விழிப்புணர்வு நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில்..

“ஓய்வு பெறுவதற்கு முன்னரான தயார்படுத்தல் – வெற்றிகரமான முதுமை வாழ்வு” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (06.10.2026) வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் முதல் 31ஆம் திகதி வரையான முதியோர் தினக் கொண்டாட்ட மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமையப்பெற்றதுடன் ஓரிரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவிருக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக கே. புவனேந்திரன் – சிரேஷ்ட உளவியல் உதவியாளர் மற்றும் எச்.எம். முஹம்மது பாரூக் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு ஓய்வுக்குப் பின்னரான வாழ்க்கையைத் திட்டமிடுதல், முதுமைக் காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் வெற்றிகரமான முதுமை வாழ்வுக்குத் தேவையான தயார்படுத்தல்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் முன்னெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *