பெருந்தோட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஆராய்வு!

பெருந்தோட்டப் பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றில் பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை அதிகரிப்பது தொடர்பான சிக்கல்கள், தோட்டப் பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்றுதல், குடியிருப்புகள் மற்றும் மலசலக்கூட வசதிகளை மேம்படுத்துவதற்கான காணி ஒதுக்கீட்டில் நிலவும் தடைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் மற்றும் முறையற்ற நடத்தைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, லவர்ஸ்லீப் தோட்டத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளர்களை இழிவான முறையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதுதொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தேயிலை, சிறு தேயிலைத் தோட்டம், தென்னை, கித்துல் மற்றும் பனை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *