திருவள்ளூர் அருகே காக்களூர் சிப்காட்டில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவால் ரப்பர் கழிவுகளில் தீ பற்றி மளமளவென பரவியதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே காக்களூர் சிப்காட்டில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ரப்பர் அறுக்கும் பொருள்களைத் தாயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை இன்று காலை அந்த தொழிற்சாலையில் உள்ள வீணாகும் ரப்பர் கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டு ரப்பர் கழிவுகளில் தீப்பற்றியது.
இந்த தீ சிறிது நேரத்தில் கட்டுக்கு அடங்காமல் மளமளவென பரவியதால் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து தகவல் அறிந்த திருவள்ளூர் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் தனசேகரன் தலைமையில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

