தண்டனை பெற்ற பிக்குகளின் காவியுடை குறித்து பௌத்தபீடங்களே தீர்மானிக்கும்!

குற்றச்சாட்டுகள் மற்றும் தவறுகளுக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் தொடர்ந்து காவியுடை அணிந்திருக்க வேண்டுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பிக்குகள் அங்கம் வகிக்கும் பௌத்த பீடமே தீர்மானிக்க வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தவறிழைக்கும் பிக்குகள் எதிர்காலத்தில் சிறை செல்ல நேரிட்டால் அந்த பிக்குகள் சார்ந்துள்ள பௌத்த பீடங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்விடயத்தில்,பௌத்த அலுவல்கள் ஆணையாளரூடாக மூன்று பிரதான பௌத்த பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகள் காவியுடை அணிந்திருக்க வேண்டுமா, இல்லையா என்பதைச் சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிப்பதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட பௌத்த பீடமே தீர்மானிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இவ்வாறான சம்பவம் இடம்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட பௌத்த பீடத்துக்கு அறிவித்து பௌத்த அலுவல்கள் ஆணையாளர் ஊடாக மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *