“எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில், முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் சமூக உரிமைகளுக்காக குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்முனையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான ஏ.ஆர். அமீர் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் நியமனம் மற்றும் ஹிஜாப் விவகாரத்தில் அநீதி மற்றும் கலாச்சார உரிமை மீறல் இடம்பெற்றதாக ஏ.ஆர். அமீர் தெரிவித்தார்.
இதற்கு தீர்வு காண முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்த நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்படுவதும், சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் சமூக செயற்பாட்டாளர்களின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சியாகும் என அவர் கூறினார்.
மேலும், அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதித்துவம், ஆணைக்குழுக்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்களில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முஸ்லிம்களின் தனித்துவமான கலாச்சார மற்றும் மத உரிமைகளை அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் தொடர்பிலும், கல்முனைப் பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் எல்லை விவகாரங்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் முன்வந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக மற்றும் மீனவர் சங்கங்களை ஒன்றிணைத்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஆறு பேருக்கான நியாயமான தீர்வுக்காகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நிகழ்வில் உறுதியளிக்கப்பட்டது.

