கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று (03) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட வளாகத்தின் பேராசிரியர் டி. வரகுணம் ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமானது.
பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தமிழ் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை வாத்தியங்களுடன் பட்டதாரிகள் மற்றும் அதிதிகள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து பட்டமளிப்பு நிகழ்வு ஆரம்பமானது.
இம்முறை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,369 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், மூன்று நாட்கள் நடைபெறும் விழாவின் முதலாவது நாளில் 285 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் கலாநிதி, முதுமாணி, மருத்துவம், தாதியியல், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வியை நிறைவு செய்த மாணவர்களும், நவீன வேளாண்மைத் தொழில்நுட்பம், உயிரியல் முறை உற்பத்தி அமைப்புகள், நிலையான விவசாயம் மற்றும் தொழில்முயற்சியாண்மை உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்களும் அடங்குகின்றனர்.
பட்டமளிப்பு விழா நேற்று (03) முதல் நாளை (05) வரை மூன்று நாட்களுக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெறுகின்றது. நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள், அதிகாரிகள், பட்டதாரிகள் மற்றும் அவர்களது பெற்றோர், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

