மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள விபுலானந்தா முதியோர் இல்லத்தில், உலக சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, SriLan Can Learn Kindergarten பாடசாலையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு நேற்று (10) காலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி யனார்த்தனி மகிழ்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், சிறுவர்கள் முதியோர்களுக்கு மாலை அணிவித்து, நினைவுச் சின்னங்கள் மற்றும் அன்பளிப்புப் பொதிகளை வழங்கினர். இதன்போது முதியோர்களிடமிருந்து சிறுவர்கள் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, முதியோர்களும் சிறுவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் முதியோர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதுடன், கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்களைப் பெற்றோர்கள் தமது ஆக்கபூர்வமான பங்களிப்புடன் தயாரித்து வழங்கியிருந்தனர். நிகழ்வின் வெற்றிக்கு பெற்றோர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
“எமது நாட்டின் எதிர்காலச் சிறந்த தலைவர்கள் சிறுவர்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, சிறுவர்களிடையே அன்பு, கருணை, ஒழுக்கம் மற்றும் முதியோர்களை மதிக்கும் பண்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அத்துடன், முதியோர்களின் அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் மதித்து, அவர்களைப் போற்றிப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது.
சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் இடையிலான அன்பையும் பரஸ்பர மரியாதையையும் வலுப்படுத்திய இந்நிகழ்வு, தலைமுறைகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.

