பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை திங்கட்கிழமை (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறையினால் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கு பிரதான காரணமாகும்.
இந்த முறையினால் ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, கூட்டுத்தாபனம் 6சதவீத இலாபத்தைப் பெறும் நிலையில், நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3சதவீத இலாபப் பங்கை புதிய நிர்வாகம் குறைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
உரிய முறையில் முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் கிடைக்காத காரணத்தினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

